Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

சுய அலசல் விதி: நின்று நிதானித்து அலசினால் மட்டுமே வளர்ச்சி உடன் வரும்

The 15 Invaluable laws of Growth Tamil flashbooks.lk

“ஒரு செயலைத் திறம்படச் செய்த பிறகு, அது குறித்து அமைதியாகச் சிந்தித்துப் பாருங்கள். அந்த அமைதியான சிந்தனையில் இருந்துதான் இன்னும் அதிகமான திறன்மிக்க நடவடிக்கைகள் பிறக்கும்.” — பீட்டர் டிரக்கர்

வளர்வதற்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. வாழ்வில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய எண்ணற்றப் படிப்பினைகள் உள்ளன. ஆனால் சில வகையான வளர்ச்சிகள், நாம் சற்று நிதானித்து, நம்மை அலசிப் பார்க்கும்போதுதான் வருகின்றன.

1. சுய அலசலானது அனுபவத்தை உள்நோக்காக மாற்றுகிறது

அனுபவம்தான் சிறந்த ஆசான் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கூறி வந்துள்ளனர். ரோமானியப் பேரரசரான ஜூலியஸ் சீஸர்தான் இதை முதன்முதலாகக் கூறியதாக ஒரு நிபுணர் தெரிவிக்கிறார். ஆனால் அனுபவம்தான் சிறந்த ஆசான் என்ற கூற்றை நான் பணிவோடு மறுக்கிறேன். ஏனெனில், மதிப்பீடு செய்யப்பட்ட அனுபவமே சிறந்த ஆசான்! சீஸர் அப்படிக் கூறியதற்குக் காரணம், அவர் தன் வாழ்க்கையை அலசிப் பார்த்ததன் மூலம் ஏராளமானவற்றைக் கற்றிருந்ததுதான்.

அனுபவம் ஒரு கடுமையான ஆசான், ஏனெனில், முதலில் தேர்வு கொடுக்கப்பட்டு, பிறகு பாடம் கற்பிக்கப்படுகிறது என்ற ஒரு நகைச்சுவையான பழைய கூற்று ஒன்று இருக்கிறது. அது உண்மைதான். ஆனால், அந்த அனுபவத்திற்குப் பிறகு அதை அலசிப் பார்ப்பதற்கு நேரத்தை எடுத்துக் கொள்கின்ற ஒருவர் மட்டுமே அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார். இல்லாவிட்டால், நீங்கள் முதலில் தேர்வை எதிர்கொள்வீர்கள், ஆனால் பாடம் ஒருபோதும் உங்களுக்குக் கிடைக்காது. மக்கள் தினமும் ஏராளமான அனுபவங்களைப் பெறுகின்றனர், ஆனால் பலர் அவற்றிலிருந்து எதுவும் கற்றுக் கொள்வதில்லை. ஏனெனில், அவர்கள் தங்களுடைய அனுபவங்களை அலசி ஆராய்வதற்கு ஒருபோதும் நேரம் ஒதுக்குவதில்லை.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், குதிரை வண்டிகளில் பூட்டப்பட்டக் குதிரைகளுக்கான சாட்டைகளை உற்பத்தி செய்த அமெரிக்க நிறுவனம் ஒன்று, அவற்றின் உற்பத்திச் செயல்முறையில் முக்கியமான மேம்பாடுகளை மேற்கொண்டது. அந்நிறுவனம் உயர்தரச் சாட்டைகளைத் தயாரித்தது, தொடர்ந்து அவற்றை மேம்படுத்தியது. அவர்களுக்கு இணையாக அத்துறையில் வேறு எந்தவோர் உற்பத்தியாளரும் இருக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அவர்கள் சாட்டைகளை உற்பத்தி செய்து கொண்டிருந்தனர். ஒட்டுமொத்த அமெரிக்காவும் கார்களுக்கு மாறிக் கொண்டிருந்தது. எனவே, விரைவில் அந்நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. அந்நிறுவனத்தின் தலைவர்கள் தங்கள் துறையில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கியிருந்தால், அவர்கள் தங்கள் தொழிலில் எந்த வகையான மாற்றங்களைச் செய்திருப்பர் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.

2. சிந்திப்பதற்கும் அலசுவதற்கும் எல்லோருக்கும் ஓர் இடமும் நேரமும் தேவை

தங்களுடைய அனுபவங்களை அலசி ஆராய்ந்து அதனால் நன்மை கிட்டாமல் போனவர்கள் யாரையும் இதுவரை நான் சந்தித்ததில்லை. உண்மையில், வளர்வதில் ஆர்வம் கொண்டுள்ள ஒருவர் செய்யக்கூடிய மதிப்புவாய்ந்த நடவடிக்கைகளில் ஒன்று இது. ஊக்குவிப்பு அவர்களுக்கு அளிக்கக்கூடிய நன்மையைவிட இவ்வாறு நிதானித்து அலசிப் பார்ப்பது அவர்களுக்கு அதிக மதிப்புவாய்ந்ததாக இருக்கும். ஏனெனில், சிறிது நேரம் ஒதுக்கிக் கொண்டு நிலைமையைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவர்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ள அவர்களுக்கு வழிவகை செய்கிறது. ஒருவர் தவறான திசையில் போய்க் கொண்டிருக்கிறார் என்றால், அவர் தன் வேகத்தைக் கூட்டுவதற்கு அவருக்கு ஊக்குவிப்பு எதுவும் தேவையில்லை. மாறாக, அவர் தன் பயணத்தை நிறுத்திவிட்டு, நிலைமையை அலசி ஆராய்ந்து, பிறகு தன் பாதையை மாற்ற வேண்டும்.

தனிமையில் சிந்திப்பதற்கு நீங்கள் ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். அப்படி ஓர் இடத்தைக் கண்டுபிடித்து, உங்கள் அட்டவணையில் நேரம் ஒதுக்கி நீங்கள் அங்கு செல்லும்போது, நீங்கள் அந்த நேரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவீர்கள், அதிலிருந்து பலனடைவீர்கள்.

பெரும்பாலான மக்கள் எப்போதும் பல வேலைகளில் மும்முரமாக இருக்கின்றனர். அவர்களிடமிருந்து ஏராளமாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வேலைகளைச் செய்து முடிப்பதற்காக அவர்கள் அங்குமிங்கும் ஓடுகின்றனர். அப்போது, குறிப்பிட்டச் சில அனுபவங்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன, சில முக்கியமான நிகழ்வுகள் அவர்களுடைய வாழ்வில் ஏற்படுகின்றன. அந்த அனுபவங்களும் நிகழ்வுகளும் பல சமயங்களில் அவர்களுடைய மாற்றத்திற்கு வித்திடுகின்றன.

நம்முடைய அனுபவங்களையும் நிகழ்வுகளையும் அலசி ஆய்வு செய்வதற்கு நாம் நேரம் ஒதுக்காவிட்டால், அவற்றின் முக்கியத்துவத்தை நாம் தவறவிடக்கூடும். அவற்றை அலசுவது நம்முடைய வாழ்க்கையைச் சிறப்புறச் செய்கிறது. அதன் மூலம் நாம் படிப்படியாக வளர்கிறோம். ஏனெனில், நமக்குக் கிடைத்துள்ள அனுபவங்களின் முக்கியத்துவத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், தேவையான மாற்றங்களையும் நம்மால் மேற்கொள்ள முடிகிறது, நம்முடைய பாதையைச் சரி செய்து கொள்ள முடிகிறது. இந்த அனுபவங்களின் வாயிலாக நாம் கைவசப்படுத்தியுள்ள ஞானத்தை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய திறனும் நமக்குக் கைகூடுகிறது.

புத்தகம்: தனிமனித வளர்ச்சி விதிகள் 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *